Saturday, February 03, 2007

காதலர்களுக்கு எதிராக விசுவ இந்து பரிசத்!

அகமதாபாத்: குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் பூங்கா ஒன்றில் பேசிக் கொண்டிருந்த இளம் காதல் ஜோடிகளை விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பெண் தொண்டர்கள் பிரம்பால் அடித்து விரட்டியடித்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் சில மாதங்களுக்கு முன் இளம் ஜோடிகளை போலீசார் மிரட்டிய செயல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் எஸ்.ஐ உட்பட இரண்டு காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் அகமதாபாத் பூங்காவில் இது போன்ற சம்பவம் நேற்று நடைபெற்றது. இம்முறை போலீசுக்கு பதிலாக விசுவ இந்து பரிசத் அமைப்பினர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு இந்த அத்துமீறல் வேளையில் இறங்கினர்.

நேற்று மாலை கையில் பிரம்பு மற்றும் ஹர்க்கி மட்டைகளுடன் 50க்கும் மேற்பட்ட விசுவ இந்து பரிஷத் தொண்டர்கள் (பெண்கள் உட்பட) பூங்காவுக்குள் நுழைந்தனர். கண்ணில் கண்ட காதல் ஜோடிகளை பிரம்பால் அடித்து விரட்டினர். இது குறித்து பெண் தொண்டர் ஒருவர் கூறுகையில், பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆண்களை இந்த சமூகத்திலிருந்து விரட்டியடிக்க விரும்புகிறோம் என்றார்.

பிரம்படி வாங்கிய பெண் ஒருவர் கூறுகையில், எனது காதலருக்கு அடி விழுந்தது. தடுக்க போன எனக்கும் 4 பிரம்படி விழுந்தது. எனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்றார்.

விசுவ இந்து பரிஷத்தின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பின்னால் பாபு பஜ்ரங்ஜி என்ற விஎச்பி தலைவர் இருப்பதாக கூறப்படுகிறது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற மதகலவரம் தொடர்பாக பல வழக்குகள் இவர் மீது உள்ளன.

டெய்ல்பீஸ்: பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்த பொழுது அதனை நேரில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த இரு பிரம்மச்சாரிய இளம்(!) காதலர்கள் கட்டியணைத்து முத்தங்களை சீ.. வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனரே. அது ஏன்? நம்ம ஜோஷி அய்யாவின் ப்ளேபாய் விளையாட்டுக்கள் சிடியாக பாஜகவின் வெள்ளிவிழா மாநாட்டிலேயே வலம்வந்ததே? இந்த காமகளியாட்ட நாயகர்களை சமூகத்திலிருந்து அடித்து விரட்ட எப்பொழுது வி.இ.ப கையில் ஹாக்கி மட்டை எடுக்கப்போகிறார்களாம்?

No comments: